சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன

விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.








ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.


சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா என்ற கேள்வி அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுந்தது.


இது குறித்துப் பேசிய மத்திய கலாசார அமைச்சர் பிரஹ்லாத் படேல், சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் பதிவுகள் ஏதும் அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்திடம் இல்லை என்று கூறியிருந்தார்.


"அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, செல்லுலார் சிறையில் இருந்தபோது, அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களோ அல்லது கருணை மனு கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை" என்று அமைச்சர் கூறியிருந்தார்.



பாரத ரத்னா விருது


இந்து மதத் தலைவர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள இந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. ஆளும் பாஜக அரசும் அதற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.


கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவினர் எழுப்பி, தேர்தல் களத்தை சூடாக்கினார்கள்.


இருப்பினும், மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடையவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று கோருவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. மறுபுறம், இந்த வழக்கில் சாவர்க்கர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.


சாவர்க்கர் மற்றும் அவர் தொடர்பான சர்ச்சைகள் பற்றி பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்…